Tamil

 PRIMARY
வீரமாமுனிவர் முத்தமிழ் மன்றம்
2013-2014 கல்வியாண்டின் செயல் திட்ட அறிக்கை

பள்ளியின் முதல்வர் மற்றும் தாளாளர் அருட்தந்தை ஜானி கோய்கரா அவர்களே! பொருளாளர் மற்றும் துணை முதல்வர் அருட்தந்தை கமல்ராஜ் அவர்களே! இவ்விழாவிற்கு தலைமையேற்று சிறப்புரை வழங்க வந்திருக்கும் திருமதி. ஷீபா ராஜ் அவர்களே! இருபால் தமிழாசிரியர்களே மற்றும் இருபால் பெருந்தகையோர்களே, இருபால் மாணவ-மாணவிகளே, உங்கள் அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

2012-2013 கடந்த கல்வியாண்டில் வீரமாமுனிவர் முத்தமிழ் மன்றத்தின் இலக்கிய வளர்ச்சிக்கு  ஆக்கமும், ஊக்கமும் நல்கிய பள்ளியின் முதல்வர் அருட்தந்தை ஜானி கோய்கரா அடிகளாருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

2012-2013 ஆம்  கல்வியாண்டில் இலக்கிய மன்ற ஆரம்ப விழாவின் தலைவி திருமதி. ஜாய்ஸ் திலகம் அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார். சென்ற ஆண்டில் தலைவராக எட்டாம் வகுப்பு ‘அ’ பிரிவு மாணவி டி.எஸ். விஜயபிரியா, செயலாளராக ஏழாம் வகுப்பு ‘அ’ பிரிவு மாணவி திவ்ய பாரதி தேர்வு செய்யப்பட்டு, இவர் இருவரின் தலைமையின் கீழ் தமிழாசிரியர்களின் பேராதரவுடன் கடந்த கல்வியாண்டில் இலக்கிய வளர்ச்சி ஏறுமுகமாகவே இருந்தது என்பதை கூறிக் கொள்கிறோம். அவ்வாறே இவ்வாண்டில்  தமிழ் வளர்ச்சியில் சிறந்து விளங்கிட அன்புடன் வேண்டிக்கொண்டு வீரமாமுனிவர் முத்தமிழ் மன்றத்தின் வாயிலாக இவ்வாண்டு நிறைவேற்ற எடுத்துள்ள முடிவுகளின் விவரத்தை வாசிப்பதில் பெரு மகிழ்வடைகிறோம்.

ஒன்று முதல் ஐந்து வகுப்புகளுக்குள் தமிழ் எழுத்துக்கள் 247 முழுவதும் தெளிவாக அறியும்படி செய்தலிலும், கையெழுத்துப் பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பதிலும், எழுத்துக்களை உச்சரிக்கும் பொழுது, பிழைகளை உணர்ந்து நீக்கி உச்சரிப்பு பயிற்சியும், சொல்வதையும் கேட்டு பிழையின்றி எழுதுவதில் பயிற்சி கொடுப்பது, ஆகிய பணிகளை சீராக நிறைவேற்றுவோம் என்பதை கூறிக் கொள்கிறோம். பேச்சுக் கலையை மாணவ-மாணவிகளிடையே வளர்க்கும் பொருட்டு பல்வேறு விதமான தலைப்புகளைக் கொடுத்து வகுப்புகளில் பேச வைக்க முடிவெடுத்துள்ளோம்; மற்றும் நடனம், நாடகம், கவிதை போன்றவற்றை சீராக பயிற்சி கொடுத்து இருபால் மாணவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வீரமாமுனிவர் முத்தமிழ் மன்றத்தின் சார்பாக எட்டாம் வகுப்பு ‘அ’ பிரிவு மாணவி திவ்ய பாரதி தலைவியாகவும், ஏழாம் வகுப்பு ‘அ’ பிரிவு மாணவி யுவாஞ்சலி செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். நாங்கள் சக மாணவ-மாணவியருடன் சேர்ந்து தமிழ் வளர்ச்சிக்கு நல்ல செயல்களை ஆற்றுவோம் என்று முழு மனதாக இந்த அவைக்குத் தெரியபடுத்திக்கொள்கிறோம்.

தமிழ் வளர்ச்சிக்கு அருத்தொண்டும் நல்லாதரவும் அளித்து வரும் முதல்வர் மற்றும் இருபால் ஆசிரியர்களுக்கும் எம் மன்றத்தின் சார்பாக நன்றியை கூறிக்கொண்டு இச்செயல் திட்ட அறிக்கையினை சமர்பிக்கிறோம்.

வாழ்க தமிழ்
வளர்க தமிழ் தொண்டு
நன்றி
HIGHER SECONDARY
வீரமாமுனிவர் முத்தமிழ் மன்றம் 
2013-2014 கல்வியாண்டு செயல் திட்ட அறிக்கை
 
வையகமே உய்யுமாறு வாய்த்த தமிழே!

கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே! காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே! வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரம் அளிக்கும் வரமே! மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதி கொடுக்கும் மதியே!

வாழ்க நிரந்தரம்வாழ்க தமிழ் மொழிவாழிய வாழியவே!

நம் பள்ளியின் முதல்வரும் தாளாளருமான அருட்தந்தை ஜானி கொய்க்கரா அவர்களே, சிறப்பு   விருந்தினர் திருமதி. கீதா ராமசுப்ரமணியன் , வள்ளியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை அவர்களே, ஆசிரியப் பெருமக்களே, மற்றும் மாணவச் செல்வங்களே! உங்கள் அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கம்.

2013-2014 ஆம் கல்வியாண்டில் வீரமாமுனிவர் முத்தமிழ் மன்றத்தின் தலைவராக “11 ஆம் வகுப்பு  இ பிரிவைச் சேர்ந்த ஷேக் தன்வீர் அவர்களும்,” செயலாளராக “9 ஆம் வகுப்பு அ பிரிவைச் சேர்ந்த டி.எஸ். விஜயபிரியா அவர்களும்” தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சென்றிடுவீ ரெட்டுத் திக்கும் கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்.

என்ற மகாகவி பாரதியின் கட்டளைப்படி, எங்கள் வீரமாமுனிவர் முத்தமிழ் மன்றத்தின் சார்பாக  இந்தக் கல்வியாண்டில் மாணவ மாணவியர்களுக்கு  இலக்கிய அறிவினை வளர்த்துக் கொள்ளும்  வகையில்  கையெழுத்துப் போட்டி,கட்டுரைப்     போட்டி, கவிதைப் போட்டி, தனித்தமிழில் பேசுவோம், குழுநாடகப் போட்டி, வார்த்தைப் போட்டி, சைகைப் போட்டி போன்ற போட்டிகள் நடத்தி இலக்கிய மன்ற விழாவை சிறப்பாக நடத்துவதற்கும் முடிவு செய்துள்ளோம்.

மேலும் நாடகம், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி,  கவிதைப் போட்டி, அனைத்திற்கும் தனித்தனி மாணவ பொறுப்பாளர்களை நியமித்து தமிழ் வளர்ச்சிக்காகவும் உழைக்கத் திட்டமிட்டுள்ளோம்.

எப்படிக்கும் முதற்படியாய்த்
தமிழ் படிக்க வேண்டும்
இழந்த புகழ் மீள வேண்டும்

என்ற முயற்சிக்கு  ஏற்ப  எங்கள்  தமிழ்  செய்திப்பலகை  மூலம் மாணவர்கள்  தமிழைப் பிழையின்றி  கற்க முயற்சிகள் பல மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் ஒரு குறல், செய்தித் துணுக்குகள், பொன்மொழிகள், பொருள் வேறுபாடு அறிதல் என்பன செய்திப்பலகை மூலம் பயன்பெறவும் ஆக்கம் கொடுத்துள்ளோம். மேடைப் பேச்சுக்குரிய பயிற்சி அளிக்கவும் திட்டமிடபட்டுள்ளது.

கடலுக்கு பயந்தவன் கரையில் நின்றான் அதைப் படகினில் கடந்தவன் உலகைக் கண்டான்

என்பது போல மாணவர்கள் பல போட்டிகளில் ஊக்கத்துடன் கலந்துக் கொண்டு பரிசுகளைப் பெற்று பள்ளிக்கும் பெருமை சேர்க்கவும், மாணாக்கரின் தமிழ் திறமையை வலுபடுத்தவும், மொழியாசிரியர்கள் ஆலோசனைப்படி செயல்பட்டு வெற்றி பெற்றிடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நம் பள்ளியில் தமிழ் வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் அருட்த்தொண்டும் நல்லாதரவும் அளித்து வரும் முதல்வரும் தாளாளருமான அருட்தந்தை ஜானி கொய்க்கரா அவர்களின் தலைமையில் தமிழாசிரியர்கள் திருமதி. விக்டோரியா, திருமதி. சிவகுமாரி, திருமதி. எஸ். தனலெட்சுமி, திரு. கார்மெல், திருமதி. நிர்மலா, திருமதி யு. தனலெட்சுமி அவர்களின் அயராத உழைப்போடு வீரமாமுனிவர் முத்தமிழ் மன்றத்தின் வளர்ச்சிக்காக நாம் அனைவரும் பாடுபடுவோம்; தமிழை இத்தரணியில் வளர்த்து பாதுகாத்து; தமிழ் மணம் வீசி  வளமுடன் வாழ்வோம் என்று கூறி இந்த செயல்திட்ட அறிக்கையினை பெருமகிழ்வுடன் சமர்பிக்கிறேன்.

நன்றிவணக்கம்!